ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செயற்பாடுகள் அதிருப்தி தருவதாகவும் அந்நாடு மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேட்டோ அமைப்பு நாடுகளில் உக்ரேன் இணையக்கூடாது என்பதற்காக, அதன் அயல் நாடான ரஷ்யா, கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி முதல் அந்நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது.
இவ்விரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்டிருக்கும் போர், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ட்ரம்ப், இவ்விரு நாடுகளிடையே நடைபெற்று வரும் போரை நிறுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், அதில் இழுபறி நீடித்து வருகிறது. குறிப்பாக, உக்ரேன் மீது போரை நிறுத்த புடினை ட்ரம்ப் பல முறை வலியுறுத்தி வருகிறார்.
ஆனாலும் புடின் தொடர்ந்து உக்ரேன் மீது போரிடுவது ட்ரம்ப்பிற்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து ரஷ்ய தாக்குதல்களை சமாளிக்க உக்ரேனுக்கு கூடுதலாக ஆயுதங்களை அனுப்புவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இதற்கிடையே உக்ரைன் மீது நேற்று இரவில் ஒரே நாளில் 728 ட்ரோன்களையும் 12 ஏவுகணைகளையும் வீசித் தாக்கியுள்ளது.
இதில் 296 ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக உக்ரேன் தெரிவித்துள்ளது.
இத்தாக்குதல்கள் உக்ரேனின் மேற்குப்பகுதியில் நடத்தப்பட்டது. 3 ஆண்டுகளாக நடத்தி வரும் போரில் உக்ரைனின் ஐந்தில் ஒரு பகுதி நிலபரப்பை ரஷ்யா தன் வசப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.